மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு

விக்கிரவாண்டி, செப். 21: விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தில் உள்ள ஏஆர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்த அரசு பணியாளர்களுக்கான திறனூட்டல் மாநாடு நடந்தது.

சென்னை கணக்குத்துறை மற்றும் கருவூலத்துறை முதன்மை செயலர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், காவல்துறை துணை தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் இயக்குனர் மகாபாரதி வரவேற்றார்.முதன்மை செயலர் தென்காசி ஜவகர் பேசுகையில், மாநிலம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலமாக கடந்த நிதியாண்டில் ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து எண்ணூற்று 24 கோடி வரவாகவும், ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 256 கோடி செலவினம் ஆகவும் அரசு நிதி கையாளப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய மூன்று முன்னோடி நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கருவூலம் காகிதமற்ற அலுவலகமாக மாற்றப்படுவது. மேலும் அலுவலர்கள் தங்களது பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க நேரில் வர வேண்டிய சூழல் முற்றிலும் தவிர்க்கப்படும்.

இந்த தனிச்சிறப்பு மிக்க திட்டம் மூலமாக சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பதிவேடு பராமரிப்பு, எளிமையான முறையில் கணினிமயமாக்கப்படுகிறது. மேலும் ஓய்வூதிய பலன்கள் உரிய காலத்தில் பெற வழி வகுக்கிறது. ஆதாரப்பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால், பணி நியமனங்கள் மற்றும் பணிமாறுதல் விரைவாக மேற்கொள்ள இயலும். இப்புதிய திட்டம் நவம்பர் 2018 முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். எஸ்பி ஜெயக்குமார், சார் ஆட்சியர்கள் திருக்கோவிலூர் சாரு, திண்டிவனம் மெர்சி ரம்யா, பயிற்சி உதவி ஆட்சியர் சரவணன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, கருவூல மண்டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், விழுப்புரம் கருவூல அலுவலர் ரவிசங்கர், கூடுதல் அலுவலர் சாவித்திரி, உட்பட அனைத்து துறை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: