×

முதுகுளத்தூர் பகுதியில் தேங்கிய மழை நீரால் தொற்று நோய் ஆபத்து

சாயல்குடி, செப். 19:    முதுகுளத்தூர் அருகே கொழுந்துறையில் சமீபத்தில் பெய்த மழைக்கு வீடுகள், பள்ளி, அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு முன்பு காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் கொழுந்துரை கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஓடு, கிடுகு, கூரை வீடுகள், காலனி வீடுகள், அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களும் சேதமடைந்தது. கொழுந்துறை வடக்கு தெருக்களில் ஆக்கிரமிப்புகளால் சாலையில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் பள்ளி, அங்கன்வாடி மையம், தண்ணீர் பிடிக்கும் இடம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு நடந்து செல்லக்கூட முடியாமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

மேலும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனால் கிராமத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கவேண்டும், சேதமடைந்த பள்ளி, அங்கன்வாடி கட்டிடம், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை