பொற்படாக்குறிச்சியில் சேதமடைந்த மினிடேங்க் சீரமைக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, செப். 19:     கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொற்படாக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கருப்பையா கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இக்கோயிலுக்கு உள்ளுர் கிராம மக்கள் மட்டும் இல்லாமல் வெளியூர் மக்கள் அதிகப்படியானோர் தினமும் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள வயல் பகுதிக்கு விவசாய பணிக்கு வந்து செல்லும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்படும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் கருப்பையா கோயில் பகுதியில் ஆழ்குழாய் கிணறுடன் மினிடேங்க் அமைத்தது. அதனை பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது ஆழ்குழாய் கிணற்றில் போதுமான அளவில் தண்ணீர் உள்ளது ஆனால் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மினிடேங்க் உடைந்து சேதமாகி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த நிலையில் உள்ள மினிடேங்க்கை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடைந்த மினிடேங்க்கை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: