எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மீன் இறங்குதளம் இடிந்து விழும் அவலம்

மரக்காணம், செப். 18: மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில் உள்ளது எக்கியர்குப்பம் மீனவர் பகுதி. இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு 300க்கும் அதிகமான பைபர் போட்டுகள், கட்டுமரங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.5.4 கோடி மதிப்பீட்டில் கடற்கரை ஓரம் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டது. இந்த மீன் இறங்கு தளத்தில் வலை பின்னும் கூடம், போட்டுக்கு பயன்படுத்தப்படும் இன்ஜின்களை பாதுகாக்கும் அறைகள், மீன்கள் ஏலம் விடும் இடம், ஓய்வறைகள், குடிநீர் தொட்டி, மீன்களை பதப்படுத்தும் இடம், மீன்களை பதப்படுத்த ஐஸ் தயாரிக்கும் பகுதி, பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முறைப்படி திறப்பு விழா நடத்தி உரிய பயனாளிகளுக்கு இதுவரையில் ஒப்படைக்கவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் குறை கூறுகின்றனர்.

இதனால் ஒரு சில மீனவர்கள் தங்களது வலைகளை இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளில் வைத்துள்ளனர்.  இக்கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் முறையாக கட்டவில்லை என்று மீனவர்கள் குறை கூறுகின்றனர். இதன் காரணமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் அனைத்தும் சிதிலம் அடைந்து இடிந்து விழுகிறது. இதனால் மழை மற்றும் கோடைகாலத்தில் இந்த கட்டிடங்களை பயன்படுத்தமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி இடிந்து விழும் மீன் இறங்கு தளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: