புகையிலை விற்றால் கடை உரிமம் ரத்து

திருப்பூர், செப். 12: திருப்பூர்  மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடை  உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்  கூறியிருப்பதாவது: தமிழக அரசால்  கடந்த மே 23ம் தேதி முதல் நிகோட்டின் கலந்த புகையிலை பொருட்களை தயாரித்தல்,  சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல், வாகனங்களில்  எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது உணவு  பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 திருப்பூரில்  தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்தல், விநியோகம் மற்றும்  விற்பனை செய்பவர்களை தொடர் கண்காணிப்பின் மூலமாக கண்டறிந்து அவற்றை  பறிமுதல் செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் உரிய  தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன்தொடர்ச்சியாக,  தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல்,  விநியோகம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் நிறுவனங்கள் மற்றும்  கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: