அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

விழுப்புரம், செப். 12: விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய அளவில் தமிழகம் மின் உற்பத்தியில் சாதனை படைத்து வருவதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மணிக்கு ஒரு முறை மின் நிறுத்தம் ஏற்படுகிறது. ஒரு மணி நேரம் மின்சாரம், ஒரு மணி நேரம் பவர் கட் என அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது.

விழுப்புரம் நகர பகுதியில் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் இரவில் மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன், வளவனூர் துணை மின்நிலையத்தை பொதுமக்கள் இரவு நேரத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வளவனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 24 மணிநேரத்தில் 8 மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. மணிக்கு இரண்டு முறை மின்நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் தொட்டிகளில் நீரேற்றும் பணியும் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பம்புசெட் மூலம் நீர் பாசனம் செய்து வருகின்றனர். தற்போது நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் பாசனம் தேவை. ஆனால் போதிய மின்சாரம் இல்லாததால் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: