நீர்நிலை ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்

திருப்பூர், செப்.11:  திருப்பூரில் நீர் நிலைகள் மற்றும் அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஆகியவை திருப்பூர் தாராபுரம் சாலையில் நொய்யலின் கிளையாகச் செல்லும் நீரோடைகள். இவற்றின் கரையோரங்களில் ஒரு கி.மீ., தொலைவில் ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் நிறுவனங்கள், சாய, சலவைப் பட்டறைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நள்ளிரவு வீடுகளில் வெள்ளம் புகுந்தது.  இதனால், மக்கள் வீட்டின் கூரைகளில் தஞ்சம் புகுந்தனர். அன்று இரவு பெய்த பெரும் மழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ள பாதிப்பில் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ள பெருக்குக்கு காரணம், சங்கிலிப்பள்ளம் ஓடை நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிமுகத்துவார பகுதி குறுகலாக மாறிவிட்டது. திருப்பூருக்கு மேற்குப் பகுதியில், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஊர்களின் வழியாக வரும் சிற்றோடையும், சின்னக்கரை என்ற கிராமத்தின் வழியாக வரும் ஓடையும் ஓரிடத்தில் இணைந்து, இங்கு கல்லூரி அருகேயுள்ள குளத்தில் சங்கமிக்கிறது.

திருப்பூருக்கு தெற்குப் பகுதியாக விளங்கும் வீரபாண்டி பிரிவு முதல் வடக்கு நோக்கி வரும் தண்ணீரும், இதே கல்லூரி வழியாக வந்து அதே குளத்தில் கலக்கிறது. 67 ஏக்கர் பரப்பு கொண்ட அந்தக் குளம் நிறையும்போது, திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகேயுள்ள மடை வழியாக, உபரிநீர் வெளியேறி, ஜம்மனை ஓடை வழியாக நொய்யலில் கலக்க வேண்டும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் குளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகின. ஜம்மனை ஓடைக்குள்ளும் ஆயிரக்கணக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள் உருவாகின. அந்த வகையில், ஓடைப்பகுதி மட்டும் சுமார் 60 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கின்போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. பெயர் அளவிற்கு சில வீடுகளை மட்டும் அகற்றியதோடு சரி. இந்நிலையில், தற்போது, மேலும் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் புதிதாக உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், `ஏற்கனவே ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்படாத நிலையில், சில அரசியல் பிரமுகர்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி பனியன் தொழிலாளர்ளுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் போல், நடந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories: