பவானிசாகர் அணை 99 அடியை எட்டியது

சத்தியமங்கலம்: தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய அணை என்ற சிறப்பு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கடந்த 2 மாதங்களில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததை தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.97 அடியாகவும், நீர் இருப்பு 27.9 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6848 கனஅடியாகவும், அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 3800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியுள்ளதால், தற்போது பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என்பதோடு 2ம் போக பாசனத்திற்கு நீர் திறப்பதிலும் சிக்கல் இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: