வீட்டுமனை பட்டா குறித்து தவறான வதந்தி சட்டம் ஒழுங்கு பிரச்னைைய ஏற்படுத்தும் கிராம உதவியாளர் மீது நடவடிக்கை

 விழுப்புரம், ஆக. 14: நெசவாளர் குடும்பங்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாக்களை பஞ்சமி தரிசு நிலங்கள் என்று ஆதிதிராவிட மக்களிடம் தவறான வதந்தியை கிளப்பி சட்டம் ஒழுங்கு பிரச்னைைய ஏற்படுத்தும் கிராம உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 26 நெசவாளர் குடும்பத்தினர் விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் இருந்த நெசவாளர்களுக்கு வீடு இல்லாததால் கடந்த 1998ம் ஆண்டு 26 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது இந்த இடத்தில் அனைவரும் வீடுகட்டி வசித்து வருகிறோம். இதனிடையே எல்ராம்பட்டு முன்னாள் கிராம உதவியாளரும், தற்போது மேமாளூரில் உதவியாளராக பணியாற்றி வருபவர் எங்களுக்கு வழங்கப்பட்ட இடம் பஞ்சமி தரிசு என்று ஆதிதிராவிட மக்களிடம் தவறான வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்.

இதற்காக கிராம உதவியாளரும், அவரது நண்பரும் சேர்ந்து ஆதிதிராவிட மக்களிடம் இந்த இடத்தை உங்களுக்கு வீட்டுமனை பெற்றுத்தருவதாக கூறி அவர்களிடம் பணத்தை வசூலித்து கடந்த வாரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மனு அளித்துள்ளனர். எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிலங்களை பஞ்சமி தரிசு என்று ஆதிதிராவிட மக்களிடம் பொய்யான தகவல்களை கூறி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் செயல்படுகின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: