திருக்கோவிலூர் நகரில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்?

திருக்கோவிலூர், ஆக. 13: திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறைகளுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதில் நிரந்தர ஆக்கிரமிப்புகளுக்கு, அளவீடு செய்யப்பட்டு குறியீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 3ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்பில் வியாபாரம் செய்து வந்த சிறு, குறு, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வந்தனர். வழக்கமாக, தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் ஓரிரு நாட்கள் சென்றபிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைப்பது வழக்கம். இந்த முறை ஆக்கிரமிப்பு அகற்றி சுமார் 40 நாட்கள் ஆகிய நிலையிலும், அதிகாரிகளும், காவல்துறையினரும் அதே இடத்தில் கடைகள் அமைக்க தடை விதித்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தர இடம் தேர்வு செய்யும் வரை செவலைரோட்டில் பேரூராட்சி அலுவலகம் எதிர்திசையில் உள்ள இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொள்ள வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் வியாபாரிகளோ, தங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சரியான போக்குவரத்து வசதி, பாதுகாப்பு இருக்காது என கூறி அந்த இடத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், திருக்கோவிலூர் நகரில் நெரிசல் மிகுந்த சில சாலைகள் விசாலமாகி விட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதில் இன்னும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. பஸ் நிலையத்தை ஒட்டி கடைகள் அமைத்தால்தான் தங்களுக்கு வியாபாரம் நடக்கும். எனவே, அதனை ஓட்டிய பகுதிகளில் சிறிய அளவு இடத்தில் வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சார்ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு மேலாகியும் மாற்று இடம் வழங்கவில்லை. நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற குறியீடு செய்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகளோ, இதில் ஆக்கிரமிப்பின் பெரும்பாலான பகுதிகளில் அப்போது இருந்த அதிகாரிகளால் தவறான ஆவணங்களின் அடிப்படையில் பல இடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது அந்த பட்டாவை ரத்து செய்து அதன்பின்னர் தான் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியும் என்றும், அதற்காக முந்தைய வரைபடங்கள், கிராம கணக்குகளையும், தற்போதுள்ள வரைபடங்கள், கிராம கணக்குகளையும் ஒப்பீடு செய்து அதற்கேற்றவாறு நிரந்தர ஆக்கிரமிப்புகள் முழுமையாக கண்டறியப்பட்ட பின்னரே நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாகவும் வருவாய்த்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்காக இந்த ஆய்வு பணியில் அதிகாரிகள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போதே ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரசு இடத்தில் தவறான ஆவணங்களின் அடிப்படையில் பெற்ற பட்டாவை அகற்றச் செல்லும்போது அவர்களும் ஏதேனும் நீதிமன்ற வழக்கிற்கு சென்றுவிடுவார்களா என்ற குழப்பத்தில் நிரந்தர ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதில் பெரும்பாலான அரசுக்கு சொந்தமான இடத்தின் வழக்குகள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளுக்கு சொந்தமான இடத்தில் பட்டா பெற்றவர்கள் நீதிமன்ற வழக்கை தொடுத்துள்ள நிலையில், பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகி தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்காததால் பட்டா தாரர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒருதலைபட்சமான தீர்ப்பை பெற்றுள்ளனர். இதனால் அந்த இடத்தை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலூரை பொறுத்தவரையில், நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பல லட்ச ரூபாய் மதிப்பில் கிடப்பில் உள்ள வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். இதில் சில நிரந்தர ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் ஆக்கிரமிப்புகளை தானாகவே முன்வந்து அகற்றிய நிலையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டோம். இதர ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகவும், அதனால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: