காங். பிரமுகர் கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

வானூர், ஆக. 13: புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் புதுவை வாலிபர் சரண் அடைந்தார். புதுவை காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (43). காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த இவரை கடந்த 30ம் தேதி கூலிப்படை வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து காலாப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், பார்த்திபன், செல்வகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் விசுவநாதன் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோசப்பை வெட்டியதாக கூறப்படும் பிள்ளைச்சாவடியை சேர்ந்த சங்கர்கணேஷ் (28) என்பவர் கடந்த வாரம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் ஆரோவில் போலீசார் புழல் சிறையில் இருந்து சங்கர்கணேசை அழைத்து வந்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் வெங்கடேசன், சங்கர்கணேசை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சாண்டில்யன் (30) என்பவர் கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் அன்வர் சதாத் உத்தரவின் ேபரில் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: