தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் குருத்தோலை பவனி, சிறப்பு ஆராதனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு நேற்று ேதவாலயங்களில் குருத்தோலை பவனி, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஓலிவ இலைகளை கையில் பிடித்து, ‘‘தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா... உன்னதத்திலே ஓசன்னா... ’’என்று சொல்லி  பாடல்களை பாடினர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் நேற்று உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. நேற்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு, சிறப்பு ஆராதனை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலையில் தேவாலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் பாடல், பாடி பவனியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதே போல தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையின் கீழ் அனைத்து சி.எஸ்.ஐ.ஆலயங்களில் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அது மட்டுமல்லாமல் கதீட்ரல் பேராலயம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை, சூளை, பிராட்வே, வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் வெகு விமர்சையாக நடந்தது.  காலை 6 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஊர்வலமாக குருத்தோலைகளுடன் சென்றனர். குருத்தோலைகளில் தென்னை, பனை சிலுவையின் அடையாளத்தை பல்வேறு வடிவங்களில் தயாரித்து அதனை கையில் பிடித்து சென்றனர். ஆலயத்தில் கொடுக்கப்பட்ட குருத்தோலைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அதன்படி குருத்தோலைகளை எடுத்து சென்றனர்.

குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்‌ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும். அதைத் தொடர்ந்து 6ம் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படும். 7ம்தேதி தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமை ஆகும். அதனை தொடர்ந்து 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: