கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம்: மீதமுள்ள நெல்மூட்டையை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதால் மீதமுள்ள நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உரிய இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. சம்பா அறுவடைப்பணி முற்றிலும் முடிந்து விட்டதால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளின் வரத்தும் குறைந்தது. இதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணியை நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலம் அதிகாரிகள் நேற்று முதல் நிறுத்தினர்.

ஆனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள அளக்குடி,மகேந்திரப்பள்ளி, காட்டூர், நாணல்படுகை, நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, கோதண்டபுரம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த வருடம் மழைக்காலத்தில் இத்தனை வருடங்கள் இருந்ததை விட ஏழு முறை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழு முறையும் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் சம்பா செய்திருந்த நெற்பயிரில் மழை நீர் புகுந்து நெற்பயிர் முற்றிலும் சேதம் அடைந்து அழுகி நாசமானது.

ஆனால் விவசாயிகள் நெற்பயிரை மறு சாகுபடி செய்தும்,சேதமான நெற்ப்பயிர் போக மீதமுள்ள பகுதியில் பயிர் சாகுபடியை மேற்கொண்டனர்.

வழக்கமாக அறுவடை செய்யும் காலம் தள்ளி போனதால்,உரிய காலத்தில் சம்பா அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடைசி காலகட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை பணியை முடிக்கும் தருவாயில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் ஒரு வார காலத்துக்கு ஆற்றின் கரையோரம் உள்ள கிராம விவசாயிகளின் நலன் கருதி அளகுடி ஆச்சாள்புரம் கோதண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தால் அறுவடை செய்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளையும் விவசாயிகள் விற்பனை செய்து விட முடியும்.

எனவே குறிப்பாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்து விவசாயிகளிடம் மீதமுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேந்திரப்பள்ளி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவபாலன் தெரிவித்தார்.இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தெற்கு மண்டல மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: