திருப்பதி அருகே நள்ளிரவு பயங்கரம்; சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்துக்கொலை: மர்மநபர்களுக்கு வலை

திருமலை: திருப்பதி அருகே நள்ளிரவு சாப்ட்வேர் இன்ஜினியரை பெட்ரோல் ஊற்றி காருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர். திருப்பதி அடுத்த வெதுருகுப்பம் அருகே உள்ள பிராமணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (35). பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் இன்ஜினியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த அவர், சொந்த வேலையாக திருப்பதி சென்றுவிட்டு நள்ளிரவு ராமசந்திராபுரம் வழியாக காரில் வீடு திரும்பினார்.சந்திரகிரி மண்டலம் கங்குடுப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது இவரது காரை மர்ம நபர்கள் சிலர் தடுத்துள்ளனர். இதனால் காரை நாகராஜ் நிறுத்தியுள்ளார். அப்போது மர்மநபர்கள், நாகராஜை திடீரென வெளியே இழுத்து சரமாரி தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்ப முயன்றார். ஆனால் அவரை அந்த கும்பல் சரமாரி தாக்கி காரில் தள்ளியுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கார் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சந்திரகிரி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்த நிலையில் அதில் இருந்த நாகராஜ் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் நாகராஜ் அந்த கும்பலிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது காலணிகள் மற்றும் தங்கச்செயின் ஆகியவை சாலையில் விழுந்து கிடந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடுரோட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: