காஞ்சிபுரத்தில் ஒன்றிய நிதி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை: சிலிண்டர் விலை உயர்வை குறைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வருகை தந்த ஒன்றிய நிதி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வருகை தந்தார். அவருக்கு, மேளதாளம் முழங்க ஒன்றிய பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, ஒன்றிய நிதி அமைச்சர், பெண்களிடம் தங்கள் பகுதியில் அத்தியாவசிய  பொருட்கள் முறையாக கிடைக்கிறதா, கிராமத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் பெறுகிறீர்களா என கேட்டறிந்தார்.

அப்போது அவர், அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் சிலிண்டர் விலை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. சிலிண்டர் வாங்குவதற்கு சிரமமாக உள்ளது என்றனர்.  அதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நமது நாட்டில் சிலிண்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தால் வெளி நாடுகளில் இருந்து பெறப்படுகிறது.  இதனால் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால் சிலிண்டருக்கு தேவையான மானியம் வழங்கப்படுகிறது’ என்றார். ஒன்றிய நிதி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: