வீடியோ வைரலான நிலையில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற எஸ்ஐ, ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலத்தில் போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர், முதல்நிலை காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த நிலையில், ஒரு பைக்கில் வந்தவரிடம் போலீஸ் பூத்தில் வைத்து போக்குவரத்து போலீசார்  லஞ்சம் வாங்கும் வீடியோ சமூவலை தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்தபோது திருமங்கலம் காவல்நிலைய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், முதல் நிலை காவலர் பாலாஜி ஆகியோர்தான் வாகன ஒட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது பதிவாகியிருந்தது. இதையடுத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் உத்தரவின்படி, எஸ்ஐ, ஏட்டு ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘’சென்னை கோயம்பேடு மார்க்கெட், அமைந்தகரை, முகப்பேர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தலை கவசம் அணியாமல் வருபவர்களை போக்குவரத்து போலீசார் வழிமடக்கி  செல்போனில் படம் பிடித்து அபராதம் கட்டும் பில்லை அனுப்புகிறார்கள். ஆனால் தலைகவசம் அணியாமல் செல்லும் போலீசாரை கண்டு கொள்வதில்லை.

அவர்களே படம் பிடிப்பதும் இல்லை. பொது மக்களுக்கு மட்டும்தானா விதிமுறைகள். கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதால் விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதில்லை. அபராதம் விதிக்கும் பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனர். தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை விட்டு விபத்து நடக்கும் பகுதிகளில் தீவிர பணியில் ஈடுபடவேண்டும்’ என்றனர்.

Related Stories: