ஆட்டோவை மடக்கி போலீசார் விசாரித்தபோது 2 கிலோ தங்கக்கட்டிகளை போட்டுவிட்டு தப்பிய வாலிபர்: சென்னை பாரிமுனையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனையில் ஆட்டோவை மடக்கி விசாரித்தபோது 2 கிலோ தங்கக்கட்டிகளை கீழே போட்டுவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது, பாரிமுனையில் இருந்து மண்ணடி நோக்கி வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஆட்டோவில் வந்த வாலிபர் பார்சலுடன் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்தி சென்றபோது பார்சலை கீழே போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் சென்று கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறி தப்பினார். இதையடுத்து பார்சலை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் துறைமுக உதவிஆணையர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, பிராட்வே பகுதியில் மண்ணடிக்கு செல்லவேண்டும் என கூறி ஆட்டோவில் வாலிபர் ஏறியதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.  

இதையடுத்து வாலிபர் கீழே போட்டுவிட்டு சென்ற பார்சலில் 2 கிலோ தங்க கட்டிகள் இருந்தது. இதையடுத்து தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் தங்கக்கட்டிகளை எங்கிருந்து கொண்டு வந்தார், யாரிடம் கொடுக்க சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: