வி.கே.புரம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டதால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில், கோடை காலம் உட்பட ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதாலும், வெயில் வெளுத்து வாங்கி வருவதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேவேளை பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.