காரைக்கால் அலுவலகம், வீடுகளில் சிபிஐ ரெய்டு உதவி பதிவாளர், உதவியாளர் கைது: பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது

காரைக்கால்: காரைக்காலில் உதவி பதிவாளர் அலுவலகம், வீடுகளில் விடிய விடிய 12 மணி நேரம் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஆவணங்கள், நகைகள் சிக்கின. இதையடுத்து உதவி பதிவாளர், உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுவை மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் சார் உதவி பதிவாளர் அலுவலகத்தில் திருப்பட்டினம் நிரவி பகுதியை சேர்ந்த ஒருவர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய சென்ற போது அவரிடம் உதவி பதிவாளர் சந்திரமோகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் உதவிப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், உதவிப்பதிவாளர் சந்திரமோகன், அலுவலக ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

மற்றொரு குழுவினர் காரைக்கால் ராஜாத்தி நகரில் இருக்கும் உதவிப்பதிவாளர் சந்திரமோகனின் வீட்டில்  சோதனை மேற்கொண்டனர். சந்திரமோகனின் மனைவி, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பொறுப்பு வகிக்கும் திருநள்ளாறு மற்றும் நிரவி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. அவரது  உதவியாளர் அருண்குமார் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.  மதியம் 3 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை 12 மணி நேரம் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இதையடுத்து சந்திரமோகன், அருண்குமார் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, காரைக்கால் குற்றவியல் முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாபேட் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: