வீடு யாருக்கு சொந்தம் என்ற தகராறில் விபரீதம் துப்பாக்கியால் சுட்டு அண்ணன் கொலை: தம்பி வெறிச்செயல்

சென்னை: திருக்கழுக்குன்றம் அருகே வீட்டுக்கு உரிமை கோரும் பிரச்னையில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் தம்பி. அவரை போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம், எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேசன் (30), இவரது தம்பி சந்திரன் (28) இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் ஒரே தொகுப்பு வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்த தொகுப்பு வீட்டை  தனக்கு தரும்படி தம்பி சந்திரன், அண்ணன் வெங்கடேசனிடம் பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அண்ணன் வெங்கடேசன், இந்த வீட்டை நான் வைத்துக் கொள்கிறேன்.

இந்த வீட்டிற்கு பின்னால் உள்ள காலி இடத்தை நீ எடுத்துக் கொள், மேலும்  ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 2 சவரன் நகை தருகிறேன் என்று கூறியதாகவும் அதற்கு தம்பி ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்குமிடையே அடிக்கடி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இருவருக்குமிடையே மது போதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை நள்ளிரவு வரை நீடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றும் தொடர்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஆத்திரமடைந்த தம்பி சந்திரன், அதிகாலை 2 மணியளவில் அண்ணன் வெங்கடேசனின் மார்பில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேசன், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் சந்திரன், துப்பாக்கியுடன் தப்பிவிட்டார். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனை கொன்றுவிட்டு தலைமறைவான சந்திரனை மாமல்லபுரம் அடுத்த கடும்பாடி என்ற பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: