வீட்டு சிலிண்டரில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.75.50 குறைப்பு: சென்னையில் ரூ.2,192.50க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் இம்மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.75 முதல் ரூ.92 வரை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.75.50 குறைந்து ரூ.2,192.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. திரிபுரா, நாகலாந்து, மேகலாயா மாநில தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1100ஐ தாண்டியது. சென்னையில் ரூ.1,118.50, சேலத்தில் ரூ.1,136.50, டெல்லியில் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 

இதேபோல், கடந்த மாதத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,268, சேலத்தில் ரூ.2221 ஆகவும், டெல்லியில் ரூ.2119.50, மும்பையில் ரூ.2071.50, கொல்கத்தாவில் ரூ.2221.50 என நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான புதிய விலையை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், வர்த்தக சிலிண்டர் விலை இம்மாதத்திற்கு ரூ.75 முதல் ரூ.92 வரை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.2,268ல் இருந்து ரூ.75.50 குறைக்கப்பட்டு ரூ.2,192.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.2,221ல் இருந்து ரூ.80 குறைந்து ரூ.2,141 ஆகவும், டெல்லியில் ரூ.91.50 குறைந்து ரூ.2,028 ஆகவும், மும்பையில் ரூ.91.50 குறைந்து ரூ.1,980 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.89.50 குறைந்து ரூ.2,132 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தாமல் ஒரே நிலையாக வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 மாதமாக சராசரி நிலையில் இருக்கிறது. பெரிய அளவில் ஏற்றமும், இறக்கமும் அடையவில்லை. அதனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையில் நீடிக்கிறது. வர்த்தக சிலிண்டர் விலை மிக அதிகளவு சென்றநிலையில், ரூ.75 முதல் ரூ.92 வரை குறைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: