வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் சத்யாகிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணமாகும். அதற்காக நான் தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.   வைக்கம் சத்யாகிரகம்  ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த ஒரு போராட்டமாகும். அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் அதற்கு வலிமை அதிகம் என்பதை வைக்கம் சத்யாகிரக போராட்டம் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு ஈடு இணை இல்லாத போராட்டமாகும்.  இது சமூக மாற்றங்களுடன், தேசியமும் இணைந்த ஒரு போராட்டமாகும்.

சுதந்திரமாக நடமாடுவது என்பது ஒரு குடிமகனின் உரிமையாகும். ஆனால் இதைத் தடுக்கும் நிலை தான் நம்முடைய நாட்டில் அப்போது இருந்தது.  அதனால்தான் இந்த நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் ஒரே போராட்ட குணம் கொண்டவர்கள். சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் நடந்த தோள் சீலை போராட்ட நிகழ்வில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டோம். அங்கு வைத்துத் தான் வைக்கம் சத்யாகிரக நூற்றாண்டு விழாவை இணைந்து கொண்டாடலாம் என தீர்மானித்தோம். இணைந்து போராட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை வைக்கம் சத்யாகிரக போராட்டம் வலியுறுத்துகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் இதுபோல இணைந்து போராடி வெல்ல வேண்டும். வரும் காலத்திலும் இதுபோன்ற நிலை தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: