ஆணையும், பெண்ணையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது-நேசமணி கல்லூரி விழாவில் கவிஞர் அறிவுமதி பேச்சு

நாகர்கோவில் : ஆணையும், பெண்ணையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது என்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழாவில் கவிஞர் அறிவுமதி பேசினார்.

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா நடந்தது. துணை முதல்வர் டாக்டர் பிஜு வரவேற்றார். முதல்வர் டாக்டர் பால்ராஜ் அறிக்கை வாசித்தார். தாளாளர் டாக்டர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் டாக்டர் ஷீலா கிறிஸ்டி ஓய்வு  பெறும் பேராசிரியர் மற்றும் ஊழியர்களை பாராட்டினார். போதகர் பாக்யராஜ் உட்பட பலர் பேசினர்.

கவிஞர் மற்றும் எழுத்தாளர் அறிவுமதி கலந்து கொண்டு பேசியதாவது:மிக நெருங்கிய நட்பால் என்னை அழைத்து வந்தவர் இசைஞானி இளையராஜா. ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரகுமான் இசையிலும் நான் பாடல் எழுதியுள்ளேன். ஒன்றே முக்கால்  நிமிடத்திலும் ஒரு பாடல் எழுதி பெருமை பெற்றுள்ளேன். பல புத்தகங்கள் எழுதி உள்ளேன். இந்த அரங்கத்தில் மாணவர்களையும் மாணவிகளையும் தூணியால் பிரித்து வேலி கட்டி வைத்துள்ளனர். ஆண்பாலையும் பெண் பாலையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது. பிரித்தால் சமூக நோய்களை உருவாக்கும். முதல்வராய் இருக்கட்டும் தாளாளராக இருக்கட்டும். அனைவருமே இந்த கல்லூரி வாழ்க்கையை கடந்து வந்தவர்கள்.

 ஒரு காலத்தில் பெண் கல்வி இல்லாமல் இருந்தது. தற்பொழுது பெண் கல்வி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விடுமுறை காலங்களில் பெண் தோழிகள் ஆண் தோழர்களை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுக்க வேண்டும்.  இதே போல் ஆண் தோழர்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுக்க வேண்டும். இதனால் அந்த பெற்றோருக்கு புதிய மகள்களும், புதிய மகன்களும் கிடைப்பார்கள். அப்பொழுதுதான் நட்பு காலம் வளரும். இவ்வாறு கவிஞர் அறிவுமதி பேசினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் பல்வேறு  கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Related Stories: