ரூ.30 லட்சத்தை இழந்ததால் ஆன்லைன் ரம்மி விளையாட கொள்ளையடித்த வாலிபர்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

சேலம்: ரூ.30 லட்சத்தை இழந்ததால் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாக நகை பறிப்பு வழக்கில் கைதான் வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (80), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி நல்லம்மாள் (72). இவர்கள் இருவரும் தங்களது விவசாய தோட்டத்தில் வசித்து வருகின்றனர். அந்த தோட்டத்திற்கு கடந்த 1ம் தேதி வாலிபர் ஒருவர் வந்து, மூத்த தம்பதியினரிடம் அங்குள்ள பாக்கு மரங்களை குத்தகைக்கு தரக்கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அங்கமுத்து, வெளியே சென்ற நிலையில், மூதாட்டி நல்லம்மாளை சுத்தியால் தாக்கி, வீட்டில் இருந்த 17 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார்.

இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஆத்தூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (28) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 17 பவுன் நகையையும் கண்ணன், ஆத்தூரில் உள்ள தனியார் நகைக்கடையில் ரூ.6 லட்சத்திற்கு விற்பனை செய்திருப்பது தெரிந்தது. அந்த நகையை போலீசார் மீட்டனர். கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியல், பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: பாக்குமரங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கண்ணனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், தொழிலில் கிடைக்கும் வருவாயை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் போட்டு வந்துள்ளார். அதில், ரூ.30 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளார். இருந்தாலும் அந்த விளையாட்டை கைவிட முடியாமல், தொடர்ந்து ஆடியுள்ளார். அந்தவகையில், மூத்த தம்பதிகளான அங்கமுத்து, நல்லம்மாளின் தோட்டத்திற்கு வந்து பாக்குமரங்களை குத்தகைக்கு கேட்டபோது, பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் அங்கமுத்து சாப்பாடு வாங்குவதற்காக வெளியேசென்றதும், மூதாட்டியிடம் இருந்து 17 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அந்த நகையை ரூ.6 லட்சத்திற்கு விற்றதும், 3 லட்ச ரூபாயை கடனை அடைக்கவும், மீதியுள்ள பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் போட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட போதிய பணம் இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்டதாக கண்ணன் கூறினார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கைதான கண்ணனை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: