ரூ.20 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த காரை வாங்கிவிட்டு மோசடி கணவனை பிரிந்த 27 வயது ஆசிரியை மீது மும்பை தொழிலதிபர் பரபரப்பு புகார்: பாலியல் தொல்லை கொடுத்ததாக போட்டி கம்ப்ளைன்ட்; இருவர் மீதும் வழக்கு

கோவை: ரூ.20 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த காரை வாங்கிவிட்டு மோசடி செய்ததாக மும்பை தொழிலதிபர் அளித்த புகாரில் கணவனை பிரிந்த 27 வயது ஆசிரியை மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. பதிலுக்கு மும்பை தொழிலதிபர் மீது ஆசிரியை பாலியல் தொல்லை புகார் அளித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44). செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த 27 வயது தனியார் பள்ளி ஆசிரியையுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த ஆசிரியை கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இதனால், ஆசிரியையும், ராஜேசும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது அந்த ஆசிரியை, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கூறி ராஜேசுடன் பழகி வந்ததாக தெரிகிறது. பின்னர் சில நாட்கள் கழித்து தனக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்பும் ஆசிரியை உடன் ராஜேஷ் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

அப்போது ஆசிரியை, தந்தையுடன் வசித்து வருவதால் பணம் தேவைப்படுவதாகவும், கடனாக பண உதவி செய்யுமாறும் ராஜேஷிடம் கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ராஜேஷ், ரூ.90 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். பின்னர் ஆசிரியை, சொந்தமாக ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தொழில் செய்ய போகிறேன் எனக்கூறி ராஜேசிடம் ரூ.20 லட்சம் ரொக்கம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், கார் ஆகியவற்றை வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, ராஜேசுடன் பேசுவதையும், பழகுவதையும் ஆசிரியை தவிர்த்து உள்ளார். ஒரு கட்டத்தில் ராஜேஷ், தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தால், தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், கோவைக்கு வந்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியை மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே போத்தனூர் போலீசில் ஆசிரியை ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘நான் பழக்கத்தின் பேரில் தொழில் தொடங்க வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தேன். அவர் ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களை அனுப்பினார்.

அதனை விற்பனை செய்து அதற்குண்டான பணத்தை அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால், ராஜேஷ் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தினார். மீண்டும், மீண்டும் இரவு நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். அதன்பேரில், போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மும்பை தொழிலதி பரும், ஆசிரியையும் மாறி மாறி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Related Stories: