ரூ.6.16 கோடியில் பூமாலை வளாகங்கள் புதுப்பிப்பு; ரூ.145 கோடியில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை

சென்னை: 29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதில் உரைத்தார். அப்போது பேசிய  அவர்,

ரூ.6.16 கோடியில் பூமாலை வளாகங்கள் புதுப்பிப்பு:

29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கை அடைய ரூ.20 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். 2 ஆண்டுகளில் ஊரக, நகர்ப்புறங்களில் 70,800 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.37 கோடியில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 50,000 உற்பத்தியாளர்களுக்கு ரூ.50 கோடி தொடக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 1,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000 கோடியில் வங்கி இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றார்.

காலை உணவுத் திட்டம் ரூ.1 கோடியில் பயிற்சி:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சமையல் செய்முறைக்கு ரூ.1 கோடியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் உதயநிதி கூறினார். வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். ஊரகப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக் குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி தரப்படும் என்றும் கூறினார்.

37 வானவில் மையங்கள் உருவாக்கப்படும்:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில் வானவில் பாலின வள மையம் உருவாக்கப்படும். வானவில் மையங்கள் அமைக்க நடப்பாண்டு ரூ.1.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், வளரிளம் பெண்கள் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

ரூ.5 கோடியில் மதி அங்காடிகள் அமைக்கப்படும்

சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை, காட்சிப்படுத்த ரூ.5 கோடியில் மதி அங்காடிகள் அமைக்கப்படும். 100 முக்கிய சுற்றுலா தலங்களில் மதி அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் ரூ.50 கோடியில் வலுப்படுத்தப்படும் 1,000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்க ரூ.50 கோடியில் நிதித் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் சிறுதானிய விதை அலகுகள் ரூ.2 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

5,000 சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு நிதி:

ரூ.75 கோடியில் 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சிறப்பு சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய ரூ.3 கோடியில் 100 மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வாங்கப்படும். ரூ.2 கோடியில் 100 சான்றளிக்கப்பட்ட சிறுதானிய உற்பத்தி அலகுகள் மகளிர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் அமைக்கப்படும். மகளிர் குழுக்கள் சிறுதானிய உணவகங்கள் நடத்திட ரூ. 1.85 கோடி வழங்கப்படும் என்றார்.

ரூ.145 கோடியில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி:

ரூ.145 கோடியில் 40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும். ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 1,000 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.10 கோடியில் உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் 10,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

Related Stories: