சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை

வருசநாடு: வருசநாடு அருகே உள்ளது சின்னச்சுருளி அருவி. இந்த அருவிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அருவிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கும் ஊராட்சி சார்பில் 10 ரூபாயும், வனத்துறை சார்பில் 30 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சின்னச்சுருளி அருவி மேகமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த அருவி மூலிகை சார்ந்த அருவி என சுற்றுலா பயணிகளால் கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆடி அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை இங்கு அதிகரித்து காணப்படும். இங்கு வரும் வாகனங்களுக்கு இரண்டு சோதனை சாவடிகள் அமைத்து, வனத்துறை மற்றும் ஊராட்சி சார்பில் கட்டணம் அதிகளவு வசூல் செய்வது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட சோதனை சாவடிகளை கலெக்டர் சோதனை செய்து வசூல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சின்னச்சுருளி அருவியில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் ஏன் அதிக வசூல் கட்டணம் செய்கிறார்கள் என தெரியவில்லை. இதற்கு தமிழக சுற்றுலாத்துறை மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: