ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில், வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், வேலைக்கார பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து மேலும் 43 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகள் ரஜினி வீட்டில் திருடிய பரபரப்பு தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா (41), கடந்த மாதம் 27ம் தேதி ேதனாம்பேட்டை காவல் நிலையத்தில், எனது வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து 60 சவரன் தங்கம், வைரம், நவரத்தின நகைககள் மாயமாகியுள்ளதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

 தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்திய போது, வேலைக்கார பெண் ஈஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றது தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனே ஈஸ்வரியை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர், கார் டிரைவர் வெங்கடேசனுடன் இணைந்து ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து பெருமளவு தங்கம், வைர நகைகளை சிறுக சிறுக திருடியது தெரியவந்தது.  அதைதொடர்ந்து போலீசார் கார் டிரைவர் வெங்கடேசனை பிடித்து இருவரையும் நேரில் விசாரணை நடத்திய போது, ஈஸ்வரி மூலம் நகைகள் திருடி வெங்கடேசன் அதை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனை செய்ததும், ஈஸ்வரி சோழிங்கநல்லூரில், திருடிய நகைகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை வைத்து ரூ. 95 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்று வாங்கி இருந்ததும் தெரியவந்தது.  உடனே வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி திருட்டு நகைகளை விற்பனை செய்த கடையில் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சோழிங்கநல்லூரியில் திருட்டு பணத்தில் வாங்கிய சொத்து பத்திரத்தை போலீசார் மீட்டனர்.

இந்த வழக்கில், லாக்கரில் இருந்து ஐஸ்வர்யாவின் தங்கம், வைர நகைகள், நவரத்தினம் என மொத்தம் 60 சரவன் தான் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் சொத்து பத்திரங்கள் மீட்கப்பட்டது. இதனால் போலீசாருக்கு மீதமுள்ள 40 சவரன் தங்க நகைகள், வைரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் யாருடையது என சந்தேகம் வந்தது. பின்னர் ஐஸ்வர்யாவிடம் நடத்திய விசாரணையில் எனது திருமணத்திற்கு தந்தை அளித்த சீதனத்தில் 60 சவரன் தங்கம், வைரம் நகைகள் தான் எனது லாக்கரில் இருந்து திருடு போனது என்றும், மீதமுள்ள நகைகள் அனைத்தும் எனது லாக்கரில் பத்திரமாக இருப்பதாகவும், மீதமுள்ள நகைகள் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் போலீசாருக்கு நகைகள் குறித்து சந்தேகம் எழுந்தது. கைது செய்யப்பட்ட ஈஸ்வரி கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்து வருகிறார். கார் டிரைவர் வெங்கடேசன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். எனவே இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றம் வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விசாரணையில் வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவருக்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த தொடர்பு மூலம் கார் டிரைவர் கொடுத்த திட்டத்தின்படி ஈஸ்வரி நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா லாக்கரில் இருந்து நகைகள் திருடி உள்ளதாகவும், அதேநேரம் ஐஸ்வர்யாவுக்கும் அவரது கணவர் தனுஷ்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இந்த திருட்டு சம்பவத்தை இருவரும் அரங்கேற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஐஸ்வர்யாவின் 60 சவரன் நகைகளை தவிர, மீதமுள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் அனைத்தும் ரஜினி காந்த் வீட்டில் இருந்து திருடியதாக விசாரணையில் இருவரும் தெரிவித்துள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், முன்னதாக இருவரிடம் பறிமுதல் செய்த நகைகளை ஐஸ்வர்யாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு போலீசார் புகைப்படத்துடன் அனுப்பிய போது, அனைத்து நகைகளும் எங்கள் நகைகள் தான் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இதனால் மீதமுள்ள நகைகள் அனைத்தும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் என்பது உறுதியாகி உள்ளது. அதையே வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவர் தெரிவித்துள்ளனர். எனவே, மீட்கப்பட்ட நகைகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் நடத்திய முதல் நாள் விசாரணை இடையே குற்றவாளி ஈஸ்வரியை அவரது வீட்டிற்கு நேரில் அழைத்து சென்று சோதனை செய்தபோது, ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளில் மேலும் 43 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் மேலும், 100 சவரன் நகைகள் திருடி இருப்பதாகவும், பல ஆண்டுகளாக சிறுக சிறுக திருடியதால் மொத்தமாக எவ்வளவு நகைகள் திருடி உள்ளோம் என்று முழுமையான தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை என்று விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* அடகு கடையில் விற்பனை வேலைக்கார பெண்ணிடம் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பட்டியல் ஐஸ்வர்யாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். திருடிய நகைகள் அனைத்தும் கார் டிரைவர் உதவியுடன் ஈஸ்வரி மயிலாப்பூரில் உள்ள அடகு கடை ஒன்றில் விற்பனை செய்து பணம் ெபற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இருவரிடமும் விசாரணை நடந்து வருவதால் ரஜினி காந்த் மற்றும் ஐஸ்வர்யா லாக்கரில் இருந்து எவ்வளவு நகைகள் திருடியுள்ளனர் என்பது குறித்து விசாரணை முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: