ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004 முதல் செலுத்த வேண்டிய ரூ.12,281 கோடியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை பாக்கியை செலுத்த தவறினால் காவல்துறை உதவியுடன் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னையின் மையப்பகுதியான கிண்டியில் இருக்க கூடிய ரேஸ் கிளப்புக்கு 1946-ல் இருந்து அரசின் நிலம் 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்பட்டது. இந்த நிலத்தின் வாடகை ஆண்டுக்கு ரூ.614.13 என அன்றைக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி முதல் வாடகை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் படி மாம்பழம், கிண்டி தாசில்தார் கிண்டி ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ் கிளப் 1946-ம் ஆண்டு செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் வாடகையை உயர்த்துவது தொடர்பான பிரிவு எதுவும் இல்லை என தெரிவித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு ரூ.730.87 கோடி வடக்கை பாக்கி செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி 730 கோடியே 86 லட்சத்து 89 ஆயிரத்து 790 ரூபாய் வாடகை பாக்கியை ஒருமாதத்திற்குள் செலுத்த சென்னை ரேஸ் கிளப்புக்கு நிர்வாகத்திர்கு உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் காவல்துறையின் உதவியுடன் ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றி அந்த நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் அரசு நிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் எந்த ஒரு பொதுநலனும் இல்லை எனவும், நகரின் மையத்தில் உள்ள நிலத்தை மீட்டு அரசு மக்கள் நலனுக்காக பயன்படுத்தலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரசு நிலங்களின் குத்தகை விலையை உயர்த்துவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதனை சட்ட விரோதம் என்றோ, முறையற்றது என்றோ கூறமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பொதுநலனை உறுதி செய்யும் வகையிலும், அரசின் வருவாயை காக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகையை மறு ஆய்வு செய்ய அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: