தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்குவோம்: பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். சட்டப்பேரவையில், தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: தொழிலாளர்களின்  உரிமைகளைப் பாதுகாக்கும்  மாநிலம் தமிழ்நாடு. அதே வேளையில், தொழில் துறையையும் ஊக்குவிக்கிறது நமது திராவிட மாடல் அரசு.   நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தொழில் துறையில் எப்போதும் அமைதியை பேணி காத்து  வருகிறது.  மாநிலத்தில் இயங்கி வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் சுமுகமான சூழல் நிலவிவருவது ஒன்றே இதற்கு சான்றாகும். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, தொழிலாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உதாரணமாக, குறைந்தபட்ச ஊதியம் 45 தொழில் இனங்களுக்கு மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன மற்றும் முதல்முறையாக  பல்வேறு தொழில் இனங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணி நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வின்போது, அமர்வதற்கு இருக்கை வசதியினை ஏற்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நமது சமூக சீர்கேடுகளான குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறைகளை அகற்றுவதற்கு நமது அரசு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட அனைத்துத் துறை மற்றும் ஏனைய அமைப்புகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பதவியேற்ற பிறகு 461 குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் 403 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினையும் இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசு, நல வாரியங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பதிவு செய்ய முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 12,66,126 புதிய உறுப்பினர்கள் வாரியங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களின் உதவித் தொகைகளை உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது.   7.05.2021 முதல் 28.02.2023 வரையிலான காலத்தில் 9,50,456 தொழிலாளர்களுக்கு ரூபாய் 725.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட 10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு, நிதி உதவியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூபாய் 4 லட்சம் வரை வழங்கப்படுகிறது. வந்தாரை வாழவைக்கும்  தமிழ்நாடு என்ற வழியில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோரை எந்த அளவிற்கு வரவேற்கிறோமோ  அதே போல வெளி மாநில தொழிலாளர்களையும் வரவேற்கிறோம்.

அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில்  அதாவது, உணவு விடுதிகள், நகைக்கடைகள், தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், சாலைப்பணிகள், விவசாயப் பணிகள் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எவ்வித குறையுமின்றி பாதுகாப்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். வெளி மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து  குழுக்கள் வந்து ஆய்வு செய்தன. அந்தக் குழுக்கள் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றக் கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றன.  குறிப்பாக திருப்பூர் மாவட்ட வெளி மாநிலத் தொழிலாளர்களை அம்மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் ஆணையர் ஆகியோருடன் சென்று அக்குழுவினர் சந்தித்து உரையாடினார்கள்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில ஊரக உள்ளாட்சித் துறையின் செயலாளர் பாலமுருகன், வெளி மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறார்கள் என்றும், அதற்காக நாங்கள் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார். தமிழகத்தில், இதுவரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 95 மிகப் பெரிய  அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம்கள்  நடத்தப்பட்டு, 1,42,804 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம். இந்த எண்ணிக்கியை இவ்வாண்டு இறுதிக்குள்ளாக இரண்டு லட்சமாக உயர்த்துவோம். ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்றிய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். அவ்வாறு விண்ணப்பித்தாலும், அத்தேர்வுகளுக்கு முறையான பயிற்சி எடுத்து தேர்வு எழுதாததால் மிக குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெறுகின்றனர் என்பதை மிகவும் மன வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

Related Stories: