ரூ.100.7 கோடியில் 22 மாவட்டங்களில் உள்ள 123 கண்மாய்கள் புனரமைக்கப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: ரூ.100.7 கோடியில் 22 மாவட்டங்களில் உள்ள 123 கண்மாய்கள் புனரமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் கீழ் கண்மாய்கள் புதுப்பிக்கப்படும். 7 மாவட்டங்களில் புதிய பெரிய பாசனத்திட்டங்களுக்கு ரூ.13 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என சட்டப்பேரவை நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரூ.106 கோடியில் 2 வெள்ள தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 15 இடங்களில் ரூ.70 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும். செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி நீர்த்தேக்க வெள்ள கதவுகளின் இயக்கம் ரூ.32 கோடியில் தானியங்கி மயமாக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

நடந்தாய் வாழி காவிரி திட்டம் நல்ல திட்டம். அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சொல்லி உத்தரவிடப்பட்டது. அத்துடன் உங்கள் ஆட்சி முடிந்துவிட்டது; ஆனால் எங்கள் ஆட்சி வந்ததும் நடந்தாய் வாழி காவிரியை நடுரோட்டில் விடவில்லை, செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தஞ்சாவூர் கல்லுக்குளம் வாரியில் ரூ.3 கோடியில் புதிய அணைக்கட்டு அமைக்கப்படும். நாகை, தஞ்சாவூரில் கடல்நீர் உட்புகுதலை தடுக்க ரூ.13.50 கோடியில் கடைமடை கட்டமைப்பு உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கூறினார்.

Related Stories: