பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!

நெல்லை: நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பல்வீர் சிங். இவர் சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் வாயில் ஜல்லி கற்களை போட்டு அடித்து பற்களை பிடுங்குவதாக புகார் எழுந்தது. இவரால் பத்திற்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருவாய்த்துறையில் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுப்படி உட்கோட்ட நடுவர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய மூன்று நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சம்மன் கொடுக்கப்பட்டு அவர்கள் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் சார் ஆட்சியர் சபீர் ஆலத்திடம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனிடையே விசாரணையை அறிந்து கொள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரன பாஸ் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 3 நபர்களின் வழக்கு தொடர்பான ஆவணங்களை கல்லிடைகுறிச்சி போலீசார் சேரன்மகாதேவி சார் ஆட்சியரும் விசாரணை அதிகாரியுமான சபீர் ஆலத்திடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார். விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உதவி கலெக்டர் தலைமையில் நடக்கும் விசாரணையில் முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது என சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது; போலீசாரால், தான் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் கூறினார். பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

Related Stories: