கம்பம் உழவர் சந்தையில் வரத்துக்குறைவால் எலுமிச்சை விலை ‘எகிறுது’

*வெளிமார்க்கெட்டில் ₹220க்கு விற்பனை

கம்பம் : வரத்துக்குறைவால், கம்பம் உழவர் சந்தையில் எலுமிச்சம் பழம் கிலோ ரூ.120க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.220க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை தற்போது பல்வேறு பானங்கள் தயாரிக்கவும், ஊறுகாய் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் தாண்டிக்குடி, போடி பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடக்கிறது.

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் எலுமிச்சையும் ஒன்று. இவ்வளவு சிறப்புமிக்க எலுமிச்சை விவசாயத்தில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.மேலும் தற்போது, கோடைகாலம் என்பதால் எலுமிச்சையின் ேதவையும் அதிகரித்தள்ளதால் எலுமிச்சையின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் எலுமிச்சம் பழத்தை பிஞ்சிலே பறிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ.120க்கும், இங்குள்ள வெளி மார்க்கெட் கடைகளில் எலுமிச்சை கிலோ ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர்சந்தையில் கிலோ 120 ரூபாய் என்பதால், உழவர்சந்தைக்கு எலுமிச்சை வரத்து குறைவாகவே உள்ளது. வியாபாரிகள் வெளிச்சந்தையிலே அதிகளவு விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து எலுமிச்சை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.60 முதல் 110 வரை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை தருகின்றனர். அதை வாங்கி நாங்கள் ரூ.160 முதல் 200க்கு விற்பனை செய்கிறோம். இதில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் விட அதிக லாபம் பெறுவது இடைத்தரகர்கள் மட்டுமே’’ என்றார்.

Related Stories: