திருப்பத்தூர், வேலூர் மாவட்ட எல்லையில் மாமரங்கள், பாசன நீர் பைப்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

*நள்ளிரவு விவசாய நிலங்களில் அட்டகாசம்

ஆம்பூர் : திருப்பத்தூர், வேலூர் மாவட்ட எல்லைபகுதியில் உள்ள வன பகுதிகளில் இருந்து வெளியேறிய யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து மாமரங்கள், சொட்டு நீர் பாசன பைப்களை சேதப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்ட எல்லையான பேர்ணாம்பட்டு வன சரகத்திற்குட்பட்ட பாலூர் காப்பு காட்டையொட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இருந்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 யானைகள் அந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கொத்தூர், மாச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்துள்ளன.

இதில் கொத்தூர் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்த இந்த யானைகள் அங்கிருந்த மாமரங்களை வேருடன் பிடுங்கி வீசியும், மாமர கிளைகளை ஒடித்தும் சேதப்படுத்தி உள்ளன. மேலும்,

இந்த விவசாய நிலங்களில் நீர் பாசனத்திற்காக போடபட்டிருந்த பைப்புகளை யானைகள் மிதித்து துவம்சம் செய்துள்ளன. இதனால் மாமரங்கள் சேதமான நிலையில் வரும் பருவத்தில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட கூடும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேர்ணாம்பட்டு வன சரகத்தினர் மற்றும் ஆம்பூர் வன சரகத்தினர் தங்களது எல்லைப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: