ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி நாடாளுமன்றம் முடங்கியது: 2வது நாளாக கருப்பு உடையில் வந்தனர்

புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி செய்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் 2வது நாளாக நேற்றும் கருப்பு உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். மக்களவை காலையில் கூடியதும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளி செய்தனர்.

காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் அவை உத்தரவு நகல்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினர். மேலும், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதாபன், கருப்பு நிற துண்டை சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினார். அதனை பாதுகாவலர்கள் தடுத்தனர். தொடர் கூச்சல் குழப்பத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையிலும் கருப்பு உடையில் வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி செய்தனர். இதனால், மாநிலங்களவையிலும் எந்த அலுவலும் நடக்காமல் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த நிக்கத் ஜரீன், லவ்லினா போர்கோஹைன், நீத்து கங்காஸ் மற்றும் சவீத்தி போரா ஆகியோருக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

* ராகுலை கண்டித்து பாஜவினர் பேரணி மோடி குடும்ப பெயர் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி ஓபிசி சமூகத்தை சேர்ந்த பாஜ எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி சென்றனர்.

Related Stories: