நாடாளுமன்ற துளிகள்...

* சமஸ்கிருதம் அலுவல்மொழி அல்ல

மக்களவையில் பாஜ எம்பி சுப்ரத் பதாக் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, ‘’சமஸ்கிருதத்தை தொடர்பு மற்றும் அலுவல் மொழியாக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்தில் உள்ள இந்தி மட்டுமே உள்ளது,’’ என தெரிவித்தார்.

* பீகார், மே.வங்கத்தில் குறைந்தளவு போலீஸ்

மக்களவையில் பேசிய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ‘’காவல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அளித்த தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 1, 2022 நிலவரப்படி ஒரு லட்சம் பேருக்கு 196.23 போலீசார் உள்ளனர். இது அனுமதிக்கப்பட்ட 152.80ஐ விட அதிகமாகும். இது மகாரஷ்டிராவில் 186.36, உ.பி.யில் 181.75 போலீசார் என்று இருக்கிறது. அதே நேரம், பீகாரில் ஒரு லட்சம் பேருக்கு 115.08, மேற்கு வங்கத்தில் 160.76 போலீசாரே உள்ளனர்.

* 28 பாக். டிரோன்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்த, பிப்ரவரி 28, 2023 வரை, அதாவது கடந்த 3 ஆண்டுகளில் பயன்படுத்திய 28 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மூலம், 125 கிலோ ஹெராயின்,  9 எம்எம் துப்பாக்கி, 7 கை துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் பிரமாணிக் தெரிவித்தார்.

* மும்பை சென்ட்ரல் டெர்மினஸ்

பெயர் மாற்றத்துக்கு பரிந்துரை மக்களவையில் பேசிய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ‘’மகாராஷ்டிராவில் செயல்படும் மும்பை சென்ட்ரல் டெர்மினஸ்-ன் பெயரை நானா ஷங்கர்ஷேத் மும்பை சென்ட்ரல் டெர்மினஸ் என்று பெயர் மாற்றக் கோரி மகாராஷ்டிரா அரசு பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை மற்றும் ரயில்வே அமைச்சகம், தபால்துறை மற்றும் சர்வே ஆப் இந்தியா உள்பட பல்வேறு துறைகளின் அனுமதி கிடைத்த பின்னரே இது குறித்து ஆலோசிக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

*பருவநிலை மாற்றத்துக்கு நிதி தேவை

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி கல்லா ஜெயதேவ் பருவநிலை மாற்றத்தை தழுவ இந்தியாவுக்கு வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ. 6,986 லட்சம் கோடி தேவைப்படுகிறதா என்று எழுப்பிய கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ‘’நாட்டின் பருவநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு இதுவரை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கிய நிதி உள்பட உள்நாட்டு நிதியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பொருளாதாரத் துறைகளில் இந்தியாவின் பருவநிலை மாற்றத்துக்கான நிதித் தேவைகளை கணக்கிடுவது சற்று சவாலானது,’’ என கூறியுள்ளார்.

Related Stories: