வியாசர்பாடியில் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: வியாசர்பாடியில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. வியாசர்பாடி கக்கன்ஜி காலனி ராணி மெய்யம்மையார் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ (47). இவரது மனைவி சுமலதா. 17 வயதில் மகள் உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இளங்கோவன், அதிமுகவில் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்தார். எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷின் தீவிர விசுவாசி.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வியாசர்பாடி ராஜாஜி தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அம்மன் கோயில் தெரு, ராணி அம்மையார் தெரு சந்திப்பில் ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் இளங்கோவனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஐயப்பன் போலீசாருடன் வந்து இளங்கோவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஸ்டான்லி மருத்துவமனையில் குவிந்தனர். கொலை நடந்த இடத்திற்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடுபாபு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அதிகாலை ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகம் அருகே அதிதீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசாரிடம் கொலையாளிகள் 5 பேரும் சரண் அடைந்தனர்.

அவர்களை செம்பியம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர்கள் வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த சஞ்சய் (19), அருண்குமார் (28), கொடுங்கையூர் எம்ஆர் நகரை சேர்ந்த கணேசன் (23), வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (30) மற்றும் வியாசர்பாடி எஸ்ஏ காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சஞ்சய் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட இளங்கோவனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

2 வருடங்களுக்கு முன்பு வியாசர்பாடி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சஞ்சய் நடனமாடியபோது அவரை இளங்கோவன் அடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் வந்து, நடனமாடியபோதும் இளங்கோவன், அவர்களை தாக்கியுள்ளார். ஏரியாவில் எங்கேயாவது சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் நிற்பதை பார்த்தால் இளங்கோவன் தொடர்ந்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். எனவே இளங்கோவன் இருந்தால் ஏரியாவில் நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்து, இளங்கோவனை தீர்த்தக்கட்ட சஞ்சய் முடிவு செய்தார்.

அதன்படி தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு இளங்கோவன் அலுவலகத்திற்குச் சென்று அவரை  சஞ்சய் வெட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால் அலுவலகத்தில் 4 பேர் அமர்ந்து இருந்ததால் திரும்பி வந்துவிட்டனர். மீண்டும் இரவு அவர் அலுவலகத்தை மூடிவிட்டு செல்லும் வரை காத்திருந்து, பின்தொடர்ந்து வந்து சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களிடம் விசாரணை செய்தபோது, சஞ்சய் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் பாத்ரூம் சென்று தப்பியோட முயற்சி செய்தனர். இதில் கீழே விழுந்ததில் இருவருக்கும் கை எலும்பு முறிந்தது. போலீசார் அவர்களுக்கு மாவு கட்டு போட்டனர்.

சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, செம்பியம் போலீசார் இளங்கோவன் கொலை வழக்கில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ள சந்தையில் அரிசி வியாபாரம் செய்து வந்த ஒருவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏரியாவில் வாலிபர்களை அடித்து கெத்து காட்டிய அதிமுக பிரமுகர் அதே கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இரண்டு முறை உயிர் தப்பியவர்

கடந்த 2 மாதத்திற்கு முன்பு  கொடுங்கையூர் எம்கேபி நகர் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, 5க்கும் மேற்பட்டோரை ஒரு கும்பல்  வெட்டியது. அப்போது கொடுங்கையூர் பகுதியில் இளங்கோவனை வெட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஒரு கடைக்குள் சென்று தப்பித்து விட்டார். தொடர்ந்து ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலின்போதும் இளங்கோவனை வெட்ட திட்டம் போட்ட சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் அவரது அலுவலகம் சென்றபோது இளங்கோவன் இடைத்தேர்தலுக்காக சென்றுவிட்டது தெரியவந்தது. அதனால் அப்போதும் தப்பித்து விட்டார். நேற்று முன்தினம் சஞ்சய் உள்ளிட்ட கும்பல் ஸ்கெட்ச் போட்டு சரியாக இளங்கோவனை வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது.

* ஊருக்குள் இருக்க விடமாட்டார்

கைது செய்யப்பட்ட சஞ்சய் உள்ளிட்டோரை விசாரணை செய்தபோது, சிறுசிறு பிரச்னைக்கு ஏன் இவ்வளவு பெரிய கொலை செய்தீர்கள். அவரை அடித்துவிட்டு சென்றிருக்கலாமே என போலீசார் கேட்டதற்கு, அவரை அடித்துவிட்டோ அல்லது அவரிடம் பிரச்னை செய்துவிட்டோ சென்றிருந்தால் மீண்டும் அவர் எங்களை சும்மா இருக்க விட மாட்டார். கண்டிப்பாக ஆட்களை வைத்து போட்டுத் தள்ளி விடுவார். எனவே அவரிடம் விரோதம் வைத்துக்கொண்டு எங்களால் ஊருக்குள் இருக்க முடியாது. அவர் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக எங்களை கொன்று விடுவார். அதனால்தான் அவரை வெட்டிக் கொன்றோம் என கைதானவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

Related Stories: