ராகுல் காந்தி தகுதி நீக்கம், பாஜவின் அச்சத்தை காட்டுகிறது: நடிகை ரோகிணி பேச்சு!

திண்டுக்கல்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல்லில் கலை மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திரைப்பட நடிகை ரோகிணி பேசியதாவது: எதை சாப்பிட, பேச, படிக்க வேண்டும் என்று சிலர் நம்மை நிர்பந்திக்கின்றனர். சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

நமது குழந்தைகள் சமஸ்கிருதம் படித்துவிட்டு என்ன செய்வார்கள்? பன்மைத்துவம் நமது வலிமை. ஒரு வீட்டில் இருக்கும் 5 பேர் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். இயற்கையின் நியதி அது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அவர்கள் (பாஜவினர்) பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை தென்னிந்தியா சொல்கிறது. முக்கியமாக தமிழ்நாடு சொல்லிக் கொண்டிருக்கிறது. நமது முன்னோர்கள், வழிகாட்டிகள் உருவாக்கிய பாதையில் தைரியமாக நாம் செல்வதினால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது.

நமக்கு பிரிவினை வாதம், மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் சக்திகள் தேவையில்லை. சாதியின் பெயரால் நம்மை கூனிக்குறுகச் செய்யும் யாரும் தேவையில்லை. ஒரே குரலாக சமத்துவத்திற்காக பாடுபடுவோம். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக பாடுபடுவோம். இவ்வாறு ரோகிணி பேசினார்.

Related Stories: