ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200.71 கோடியில் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணி மும்முரம்

*ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு

ஈரோடு :  ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200.71 கோடி  மதிப்பீட்டில் பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து  வருகிறது. இப்பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் பழமையான மழை நீர் வடிகாலாக  பெரும்பள்ளம் ஓடை இருந்து வருகிறது. இந்த ஓடை ஈரோடு மாநகரின் குறுக்காக 12  கி.மீட்டர் வரை ஓடுகிறது. இந்த ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின்  கசிவுநீரும், மழை நீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.

பெரும்பள்ளம்  ஓடை முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  குடியிருப்புகளின் கழிவு நீரும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே  சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டு வந்தது. இதனால், மழை நீர் வடிகாலாக  இருந்த பெரும்பள்ளம் ஓடை சாக்கடை கால்வாயாக மாறி மாநகரின் அழகை கெடுத்து  வந்தது. இந்நிலையில், பெரும்பள்ளம் ஓடையை சீரமைத்து மேம்படுத்தவும்,  நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஈரோடு மாநகராட்சிக்கு  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.200.71 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து திண்டல் அடுத்த கதிரம்பட்டி காரப்பாறையில்  இருந்து காவிரி ஆறு வரை பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்கும் பணிகள் கடந்த  2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு  பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  தீவிரமாக நடந்தது.

தற்போது, ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில்  இருபுறமும் காங்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.  ஓடையில் 327 எண்ணிக்கையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும், ஓடையின்  பாதுகாப்பு கருதி 8.05 கி.மீட்டர் தூரத்திற்கு கம்பி வலை தடுப்புகளும், 25  இடங்களில் நீர் சரிவு அமைப்புகளும், ஓடையின் பக்கவாட்டு பகுதிகளில் 4  இடங்களில் பூங்காக்களும், 2.4 கி.மீட்டர் நீளத்தில் இணைப்பு சாலைகள்  போடப்பட்டு வருகிறது. மேலும், ஓடையின் இருபுறங்களிலும் போக்குவரத்து  வசதிக்காக சாலைகளை இணைக்கும் வகையில் செங்கோடம்பள்ளம், 80 அடி சாலை,  காரைவாய்க்கால் உட்பட 4 இடங்களில் பாலங்களும் அமைக்கும் பணிகளும் தீவிரமாக  நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  காவிரி ஆற்றில் மாநகராட்சியின் கழிவு நீர் கலக்காத வகையில், பெரும்பள்ளம்  ஓடையை சீரமைக்க ரூ.200.71கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி  பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக  மாநகராட்சி பகுதியில் கடந்த 100ஆண்டுகள் பெய்த மழை அளவினை கொண்டு, சென்னை  ஐஐடியின் திட்டத்தில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கைக்கும் கட்டமைப்பு  வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஓடையில் குடியிருப்புகளின்  கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க, சாக்கடை கழிவு நீர் ஓடையில் கலந்த  பகுதிகளில் முன்னுரிமை அளித்து பாதாள சாக்கடை இணைப்பு தரப்பட்டுள்ளது.  இதன்மூலம், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து வந்த  சாக்கடை கழிவு நீரை, தற்போது சுத்திகரிப்பு செய்து காவிரி ஆற்றில்  விடுகிறோம். பெரும்பள்ளம் ஓடைக்கு சொந்தமான மாநகராட்சி இடங்களில் 4 பசுமை  பூங்காக்களும், ஓடை கரை அருகே நடைபாதை (வாக்கிங் டிராக்) அமைக்கப்பட்டு  வருகிறது.

இது, அகமதாபாத், மதுரை வைகை ஆறு, சேலம் மணிமுத்தாறு போன்ற  முடிவுற்ற திட்டப்பணிகளை மையமாக கொண்டும், அதை விட கூடுதல்  சிறப்பம்சங்களுடன் பெரும்பள்ளம் ஓடை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து  வருகிறது. இந்த பணிகள் முழுமையாக வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

பணிகள் 6 பகுதிகளாக பிரிப்பு

ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் மற்றும்  இரண்டாம் பகுதியில் 90 சதவீத பணிகளும், 3 மற்றும் 4 வது பகுதியில் 75  சதவீதம், 5 மற்றும் 6வது பகுதிகளில் 80 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளது.  பெரும்பள்ளம் ஓடைக்குள் தூர்வாரும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. பணிகள்  நிறைவடைந்ததும் ஓடைக்குள் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். அந்த தளத்தில்  நிலத்திற்குள் தண்ணீர் செல்லும் வகையில் நவீன முறையில் அமைக்கப்படுகிறது.

Related Stories: