திருச்சியில் மருத்துவ ஊழியர் பலியான 2 நாளில் ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு தொழிலாளி தற்கொலை: 4 லட்சம் இழந்ததால் தூக்கில் தொங்கினார்

துவரங்குறிச்சி: ஆன்லைன் ரம்மியில் ரூ.4லட்சம் இழந்ததால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சியில் கடந்த 25ம் தேதி மருத்துவ ஊழியர் ஆன்லைன் ரம்மிக்கு பலியான 2 நாளில் மேலும் ஒருவர்  உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த சவேரியார் தெரு அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த மரியா பொன்னுசாமி மகன் வில்சன்(26). வையம்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் பலகார மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர், வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார். இதில் ரூ.4 லட்சம் வரை இழந்த வில்சன், கடனை திருப்பி கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு வில்சனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது, வீட்டுக்கு எப்படி பதில் சொல்வது என கடந்த ஒரு வாரமாக வில்சன் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் வில்சன் தூக்கிட்டு தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனே வில்சனை மீட்டு  மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வில்சன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிசங்கர் (42) ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.7 லட்சம் வரை இழந்ததால் விரக்தியில் கடந்த 25ம் தேதி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் ரம்மியால் திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர், கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: