இடஒதுக்கீடு கேட்டு ஊர்வலம் எடியூரப்பா வீடு மீது கல்வீச்சு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்து, அந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து ஒக்கலிகா சமூகத்திற்கு 2 சதவீதம், லிங்காயத் வகுப்பினர்களுக்கு 2 சதவீதம் என வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இதனிடையே கர்நாடக மாநிலத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின பிரிவில் இருக்கும் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் பஞ்சாரா, கொர்ச்சா, லம்பானி உள்ளிட்ட 6 அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தகோரி நேற்று பகல் ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா நகரில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் நோக்கி சென்றனர். வழியில் மாளேரகெரியில் உள்ள எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அப்போது, திடீரென எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.   எடியூரப்பா வீடு மீது ஏறி அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பாஜ கொடியை அகற்றி தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்றினர். நிலைமை மோசமாகியதால் போராட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.

Related Stories: