20 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கப்பட்ட அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மீண்டும் தொடக்கம்: இந்நாள் பொன்னாள் என துரை வைகோ பேச்சு

சென்னை: சில காரணங்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கப்பட்ட அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மீண்டும் தொடங்கப்படுவது இப்பகுதி மக்களுக்கு ஒரு பொன்னாள் என்று மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கூறினார். அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழாவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களால் கலைக்கப்பட்ட அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்படும் இந்நாள் இப்பகுதி மக்களுக்கு ஒரு பொன்னாளாகும்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் சங்கரன் கோவில் திமுக வேட்பாளர் ராஜா வாக்கு சேகரிக்க சென்றபோது மக்கள் வைத்த முக்கியமான கோரிக்கை கூட்டுறவு சங்கம் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்பது தான். இதன் மூலம் கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி ஆலடிபட்டி, அய்யாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்களும் அருகில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்களும் மிகவும் பயனடைவார்கள் என்று என்னிடம் கூறினர்கள். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்தேன். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமியை திண்டுக்கல் சென்று சந்தித்து வலியுறுத்தினேன். அமைச்சர் மீண்டும் கரிசல்குளம் சங்கம் இயக்கப்படும். நீங்கள் மன நிம்மதியுடன் செல்லுங்கள் என்று கூற, மன மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினேன்.

சங்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில் பெரியகருப்பன் புதிய கூட்டுறவுத் துறை அமைச்சரானார். அவரை சந்தித்து கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க விவரங்களை எடுத்துக் கூறினேன். கூட்டுறவுச் சங்கக் கோப்புகளைப் பார்த்த அமைச்சர், ‘கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சட்டபூர்வமாக நிறைவேற்றிவிட்டார்கள். ஆகவே கூட்டுறவு சங்கம் விரைவில் திறக்கப்படும். கவலை வேண்டாம்’ என்று கூறினார். நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். தலைவர் வைகோ அலைபேசி மூலம் அமைச்சருக்கு அழைப்பு விடுக்க, அமைச்சர் உங்கள் விருப்பப்படி, நானே தொடங்கி வைக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு ஒரு நாளில் வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்.

அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நேற்று மீண்டும் இயக்கப்பட்டது. சுமார் 20 மாத கால இடைவிடாத தொடர் முயற்சி காரணமாக நான்கு கிராம மக்களிடம் உறுதி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. இதை ஒரு சாதனையாகவே உணர்கின்றேன். இச்சாதனை நிகழ்ந்திட முக்கிய காரணம், இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சர், எடுத்துக்காட்டு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முதலமைச்சருக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என் நன்றி. 4 அமைச்சர் பெரியகருப்பனுக்கு கிராம மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

Related Stories: