தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி

சிகாரிபுரா: தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டாம் என்று எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண தயார் என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முதல்வர் பசவராஜ் தலைமையில் கடந்த வாரம் கூடிய பாஜக அமைச்சரவை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அவர்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் சேர்த்தது. முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இடஒதுக்கீட்டை பிரித்து ஒக்கலிக்கா சமூகத்துக்கு 2%, லிங்காயத் சமூகத்துக்கு 2% என வழங்க பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதனிடையே கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் 6 சமூகங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்க வில்லை என்று சிகாரிபுராவில் பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது எடியூரப்பா வீட்டை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எடியூரப்பா வீடு மீது ஏறி அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிய அகற்றி தங்கள் கோடியை பஞ்சாரா சமூகத்தின் ஏற்றினர். மேலும் எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவம் பொரித்த போஸ்டர்களை எரித்தனர். வன்முறையின் போது ஒரு காவலர் காயம் அடைந்தார். அசம்பாவித்த சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும், சிகாரிபுரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம் என எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். தவறான தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகையால் யார் மீது எந்தவொரு நடவடிக்கையுட் எடுக்காமல் அமைதியான முறையில் கையாள வேண்டும். யாரையும் கைது செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு தெரிவித்துள்ளேன். பஞ்சாரா வகுப்பின் தலைவர்களை அழைத்து நான் பேச உள்ளேன் எனவும் கூறினார்.

Related Stories: