ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், ஆளும்கட்சியான பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அதுவரை நாடாளுமன்றம் நடைபெற விடமாட்டோம் என்றும் கூறி அவர்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு ஆளும் கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று ஆளும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, ‘மோடி’ சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்து அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது.

ஆலோசனையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ராகுல் காந்தி தகுதிநீக்கம், அதானி குழும முறைகேடு விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

Related Stories: