பொதிகை எக்ஸ்பிரஸ் வருகைக்காக மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் மணிக்கணக்கில் காத்திருப்பால் அவதி: கால அட்டவணை மாற்றப்படுமா?

நெல்லை: ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் வருகைக்காக மயிலாடுதுறை -  செங்கோட்டை ரயில், மணிக்கணக்கில் காத்துக் கிடப்பதால் தென்காசி மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால அட்டவைணை மாற்றம் செய்யப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.

 மயிலாடுதுறை -  செங்கோட்டை விரைவு ரயில் (எண் 16847) மயிலாடுதுறையில் பகல்  11.30 மணிக்கு புறப்பட்டு மதுரை, ராஜபாளையம் வழியாக இரவு 9:30 மணிக்கு செங்கோட்டையை வந்து சேருகிறது.

தற்போது மதுரை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்ற காரணத்தாலும், தஞ்சாவூரில் இருந்து விருதுநகர் வரை இரட்டை அகல ரயில் பாதை இருப்பதாலும், இந்த ரயில் சரியான நேரமான இரவு 7 மணிக்கு ராஜபாளையத்தை வந்தடைகிறது. அதே நேரத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை அதிவிரைவு எக்ஸ்பிரசிற்காக இந்த ரயில் ராஜபாளையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.  50 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ராஜபாளையத்தில்  நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் கடும் வேதனைக்கு உள்ளாகின்றனர்.

இதனால் செங்கோட்டை - சென்னை பொதிகை அதிவிரைவு ரயில் அட்டவணையில் மாற்றம் செய்து சங்கரன்கோவிலில் கிராசிங் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜெகன் கூறுகையில் ‘‘மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் வசதியாக உள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து மாலை வேளைகளில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி செல்வோர் இந்த ரயிலை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் பேருந்தை விட வசதியாகவும் உள்ளது. ஆனால் பொதிகை ரயிலின் கிராசிங்க்காக ஒரு மணி நேரம் வரை ராஜபாளையத்தில் இந்த ரயில் காத்திருப்பதால், பயணிகளின் நேரம் விரயம் ஆகிறது. இதை தவிர்ப்பதற்காக பொதிகை எக்ஸ்பிரஸ் மாலை 6:20 மணிக்கு செங்கோட்டையில் புறப்படுவதற்கு பதிலாக, 10 நிமிடங்கள் தாமதமாக 6.30 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணை மாற்றினால் சங்கரன்கோவிலில் கிராசிங் ஏற்படும். மேலும் விருதுநகர் முதல் சென்னை வரை இரட்டை அகல் ரயில் பாதை இருப்பதால் சென்னை நோக்கி செல்லும்  பொதிகை ரயிலுக்கு தாமதமும் ஏற்படாது.

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலும் காலதாமதம் இல்லாமல் இரவு 9 மணிக்குள் செங்கோட்டையை சென்றடைய வாய்ப்புள்ளது’’ என்றார். மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் இரவு நேரத்தில் தாமதமாக வருவதால், சங்கரன்கோவில், தென்காசியில் இறங்கும் பயணிகள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் கிடைக்காமலும் திண்டாடுகின்றனர். எனவே அந்த ரயிலை குறித்த நேரத்தில் இயக்க ரயில்வேத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: