சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருப்போரூர்: சென்னை அருகே கோவளத்தில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் மாபெரும் படகு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தனது சொந்த கட்சியினரையே வேவுபார்த்து ஆடியோ, வீடியோ மூலம் மிரட்டும் கம்பெனியாக பாஜ விளங்கி வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை அருகே கோவளத்தில் மாபெரும் படகு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழுத் தலைவருமான எல்.இதயவர்மன் வரவேற்றார்.

இப்போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 வீதம் 46 படகுகள் கலந்து கொண்டன. இப்படகுகளின் இறுதி போட்டியை நேற்று மாலை கோவளத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் படகு போட்டியில் வெற்றி பெற்ற கானத்தூர், கோவளம், செம்மஞ்சேரி கிராம மீனவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி கூடை, பொதுமக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடத்துவதில் வல்லவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன். நான் ஏதோ படகு போட்டி என்றதும், சிறிய படகுகளில் 4 பேர்தான் போவார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர் ஆங்கிலப் படங்களில் வருவதைப் போல் படகு போட்டியை பிரமாண்டமாக நடத்திவிட்டார். காஞ்சி மாவட்ட திமுகவுடன் எனக்கு மிகுந்த நெருக்கம் உண்டு. இங்குதான் மக்களுடன் எப்போதும் திமுகவினர் நெருக்கமாக இருந்து, அவர்களுக்காக குரல் கொடுப்பார்கள். ஆனால், அதிமுக அப்படியல்ல… அவர்கள் தேர்தலுக்காக மட்டுமே மக்களிடம் வருவர். அவர்களுக்கு தற்போது தலைவர் யாரென்றே தெரியவில்லை.

எடப்பாடி இதுவரை யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. காலில் விழுந்து பதவி வாங்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்து, அவருக்கும் நம்பிக்கையானவராக இல்லை. நண்பரைப் போல் ஒன்றாக இருந்துவிட்டு, தற்போது ஓபிஎஸ்சை கழட்டி விட்டுள்ளார். தலைவரை தேடிக் கொண்டிருக்கும் கட்சி அது. அவர்களில் பலர் தற்போது பாஜ அலுவலக வாசலில் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் பாஜ ஒரு கட்சியே அல்ல. அது ஆடியோ, வீடியோ கட்சி. சொந்த கட்சிக்காரர்களை வேவுபார்த்து ஆடியோ, வீடியோ பதிவு செய்து மிரட்டும் கம்பெனி அது. ஆகவே, இக்கட்சிகளை பார்த்து மக்கள் முடிவு செய்யவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த முறையை போலவே இம்முறையும் மத்தியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, முன்னாள் எம்எல்ஏக்கள் மீ.ஆ.வைதியலிங்கம், வீ.தமிழ்மணி, து.மூர்த்தி, ஆர்.டி.அரசு, மாவட்டக்குழு தலைவர்கள் மனோகரன், செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணை தலைவர் சத்யா சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோவளம் சோபனா தங்கம் சுந்தர், நாவலூர் மகாலட்சுமி ராஜாராம், படூர் தாரா சுதாகர், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், கானத்தூர் வள்ளி எட்டியப்பன், சிறுசேரி துணை தலைவர் ஏகாம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், சுரேஷ், கிளை செயலாளர் அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: