வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு களக்காடு புலிகள் காப்பகத்தில் 30 இடங்களில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்காக 30க்கும் மேற்பட்ட இடங்களில் 60 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் (பிப்ரவரி) 7ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடந்தது.  வனத்துறை ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும் வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடயங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரித்த புள்ளி விவரங்களை செல்போன் ஆப்பில் பதிவு செய்தனர்.

தொடர்ந்து சேகரிக்கப்பட்ட வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கணக்கெடுக்கும் பணியில் தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தவும் முடிவு செய்தனர். அதன்படி களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட திருக்குறுங்குடி, களக்காடு, கோதையாறு வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியது.

இந்த 3 வனசரகங்களிலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அடர்ந்த வனப்பகுதியில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் வன்சரகர்கள் களக்காடு பிரபாகரன், திருக்குறுங்குடி யோகேஸ்வரன், கோதையாறு சிவலிங்கம் மற்றும் வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் பதிவாகும் காட்சிகள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: