கொடைக்கானலின் பசுமைக்கு ஆபத்து; காட்டுத்தீயின் கோரத்தால் கட்டாந்தரையானது வனம்: உணவின்றி திண்டாடும் வனவிலங்குகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீயின் கோரத்தால் மரங்கள், செடி, கொடிகள் எரிந்து கட்டாந்தரையாக மாறியுள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவின்றி பரிதவித்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிகள் சிலவற்றில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது. குறிப்பாக சிட்டி வியூ பகுதியில் 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதன்பிறகு ெபய்த மழையால் காட்டுத்தீ தானாக அணைந்தது. தற்போது தீ முழுமையாக அணைந்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் அதன் கோர முகத்தை காண முடிகிறது. குறிப்பாக சிட்டி வியூ பகுதியில் காட்டுத்தீக்கு அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், புற்கள் என அனைத்தும் எரிந்து கருகியுள்ளது. இதனால் பசுமையான வனப்பகுதி கருமை நிறத்தில் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது.

காட்டுத்தீயில் இருந்து உயிர் தப்பி இப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் பல இடம் பெயர்ந்து விட்டன. மான்கள் உள்ளிட்ட ஒரு சில விலங்குகள் மட்டும் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகின்றன. காட்டுத்தீயின் கோரப்பசிக்கு புற்கள், செடிகள் எரிந்து கருகியதால், வனவிலங்குகள் உணவின்றி பரிதவித்து வருகின்றன. உணவின்றி பரிதவிக்கும் வனவிலங்குகளுக்கு தீவனம் வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமைக்கு வேட்டு வைக்கும் காட்டுத்தீ பரவுவதை உடனடியாக தடுக்க நவீன உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி மலையில் பயங்கர காட்டுத்தீ

தேனி மாவட்டத்தின் போடி, குரங்கணி மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுத்தீ பரவுவது தொடர்கதையாக உள்ளது. போடி வடக்கு மலைப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராம பகுதி மற்றும் வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பரவியது. இதில் 100 ஏக்கருக்கு மேலாக மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் சில வனவிலங்குகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரியளவில் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: