பதனீர் சீசன் துவக்கம் மாவட்டத்தில் கருப்பட்டி தயாரிப்பு பணி மும்முரம்: பனை மேம்பாடுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பதனீர் சீசன் துவங்கி விட்டதால் கருப்பட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராம்நாடு குண்டு மிளகாய் போன்று கருப்பட்டிக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பனை விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்குடிக்கும், பனைமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்று பட்டது. பனை ஓலை சுவடிகள் மூலமே பல இலக்கியங்கள், அரிய தகவல்கள் கிடைக்கப் பெறுகிறது. சுமார் 100 அடி வரை வளரும் பனை மரமானது. 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. இதில் முக்கியமானது பதனீர் மூலம் கிடைக்கக் கூடிய கருப்பட்டி, பனங்கற்கண்டு, அடுத்து நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனங்குருத்து உள்ளிட்ட உணவு பொருட்கள் முதல் ஓலை, மட்டை, நார், மரச்சட்டம், விறகு என பல பொருட்கள் கிடைப்பதால் இது பூலோ கத்தின் ”கற்பக தரு” என அழைக்கப்படுகிறது.

2018 கணக்கின் படி தமிழகத்திலுள்ள சுமார் 2.50 கோடி பனைமரங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 15 லட்சம் பனைமரங்கள் உள்ளன. இதனால் பனைமரத் தொழில் விவசாயத்துடன் தொடர்புடைய முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் தொழில் மற்றும் பனைமரம் சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் கன்னிராஜபுரம், நரிப்பையூர், காவாகுளம் முதல் சிக்கல் வரையிலான சாயல்குடி பகுதிகள். திருப்புல்லானி, ரெகுநாதபுரம், தாமரைகுளம் உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகள், ராமேஸ்வரம் தீவு பகுதிகள் மற்றும் தொண்டி வரையிலும் உள்ள மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது.

கடந்த காலங்களில் பருவ மழை பெய்து, நெல் அறுவடை செய்யும் சமயங்களில் முதல் வேலையாக கருப்பட்டி தயாரிப்பிற்காக பனை மரத்தின் பதனீர்காக பாளை வெட்ட துவங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2019க்கு முந்தைய 5 ஆண்டுகளில் வறட்சியால் சீசன் நிலை மாறி, பனைமரத்தொழில் நலிவடைந்து வந்தது. வறட்சியை தாக்குபிடிக்க முடியாமல் பனை மரங்களும் பட்டுபோனது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்தது. தை மாதம் முதல் ஆவணி மாதம் வரை சீசன் என்பதால் இந்தாண்டு பனை மரத்தில் பதனீர் உற்பத்தி அதிகரித்தது. இதனால் கருப்பட்டி தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பிற்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருள் என்பதால் பால், டீ, காபி, சுக்கு டீ யில் கலந்துகொண்டு குடிப்பதற்கும், பனியாரம், தோசை உள்ளிட்ட உணவு பொருட்கள் சாப்பிடுவதற்காகவும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் பொருளாக இருக்கிறது. மேலும் உணவு பொருட்கள், மிட்டாய்கள், சாக்லெட், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பிலும் கருப்பட்டி பயன்பாடு உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் கருப்பட்டிக்கு வரவேற்பு உள்ளது. தற்போது பதனீர் சீசன் என்பதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பதனீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நரிப்பையூர் பனைமர தொழிலாளர் ஜெபமாலை கூறும்போது, ‘‘மருத்துவம் குணம் வாய்ந்ததால் கருப்பட்டியின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த மாசி மாதம் பதனீர் சீசன் துவங்கியது. 10 மரங்களிலிருந்து இறக்கப்பட்ட சுண்ணாம்பு கலந்த சுமார் 65 லிட்டர் பதனீரை வட்டையில் வைத்து சுண்ட காய்ச்சினால் கருப்பட்டி கூப்பணி(பாகு)கிடைக்கும். அதனை சுடச்சுட தேங்காய் கொட்டைச்சியில் ஊற்றி சுமார் 8 கிலோ கருப்பட்டி தயாரிக்கிறோம். குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக சுக்கு,மிளகு, ஏலக்காய் கலந்த சிறிய ரக கருப்பட்டியும் தயாரிக்கப்படுகிறது. வரும் ஆவணி மாதம் வரை சீசன் இருப்பதால் அதுவரை கருப்பட்டி தயாரிக்கப்படும்’’ என்றார்.

வியாபாரி அந்தோணி கூறும்போது, ‘‘கருப்பட்டியில் வழக்கமான கருப்பட்டி, சுக்கு, மிளகு, ஏலக்காய் இட்ட சிறிய ரக கருப்பட்டி, கருப்பட்டியை அறைத்து தூளாக்கப்பட்ட கருப்பட்டி தூள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கருப்பட்டி வெளியூர், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு ரூ.200 முதல் 250 வரையிலும், நேரடியாக வாங்க வரும் பொதுமக்களுக்கு ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாக கொடுக்கப்படுகிறது. மதுரை, கீழக்கரை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகர பகுதி வியாபாரிகள் வாங்கிச் சென்று அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ பொருள் என்பதால் கொரோனா காலத்தில் சிறிய கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு 10 கிலோ எடையுள்ள கருப்பட்டி கொட்டான் சுமார் 1,20,000 கொட்டான்கள் வரை விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் ரூ.20 கோடிக்கு வருவாய் ஈட்டியுள்ளது என்றார்.

கடந்தாண்டு வேளாண் பட்ஜெட்டில் ரேசன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு திட்டம், பனை மரங்களை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகள் விநியோகம், 1 லட்சம் பனை மரக்கன்று முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை, பனைவெல்லம் தயாரிக்க பயிற்சி, குளம், ஏரிக்கரை, சாலையோரம் வளர்த்தல், கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில் தற்போதைய பட்ஜெட்டில் பனை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பனைமரத் தொழிலாளர்களின் வாழ்வு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது என பனை விவசாய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவிசார் குறியீடு வேண்டும்

ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு என்பது வழங்கப்படுகிறது. இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார்குறியீடு பதிவுகள் மற்றும் பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொருந்துகிறது. இதன் மூலம் வேறு யாரும் வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயரில் பயன்படுத்துவதை தடுக்கமுடியும். நம்ம ஊர் பொருட்களை எவ்வித தடையின்றி வெளிநாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் அந்திய செலவானியில் நமது சந்தையின் மதிப்பு பல்மடங்கு உயர்ந்து, பொருளாதார ஏற்றத்தை பெற்று தர உதவுகிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பனங்கற்கண்டு,பனங்கருப்பட்டி போன்றவை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சீனா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள், அரபு நாடுகள், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பனை விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: