ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து சிறுவன் உள்பட 7 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, தாமோதரன் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (40). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றுமுன் தினம் மாலை 6 மணிக்கு வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையம் கணேசபுரம் சந்திப்பு அருகே மாயகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருக்குப் பழக்கமான 5 பேர் கொண்ட கும்பல் மாயகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த கும்பல், கத்தியால் மாயகிருஷ்ணனை சரமாரியாக தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவல் அறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்ட போலீசார், மாயகிருஷ்ணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாயகிருஷ்ணனுக்கு கலைப்ரியா என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகன் மற்றும் 5 வயதில் ஒரு மகள் உள்ளனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் மாயகிருஷ்ணன் கொடுத்த தகவலின்பேரில், ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த ஜீவா ரயில்நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரி ஏற்றுவது வழக்கம். மாயகிருஷ்ணன் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உறுப்பினராக இல்லை. ஆனால் தினமும் அந்த ஆட்டோ ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தி, குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வார்.

இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள நபர்கள் பலமுறை எச்சரித்தும், மாயகிருஷ்ணன் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 7 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து இந்த வழக்கில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (25), மதன் (23), அமர்நாத் (28), பூரான் என்ற சதீஷ்குமார் (28), சஞ்சய் (21), பிரேம்நாத் (22) மற்றும் 17 வயது சிறுவன் என 7 பேரை கைது செய்த ஓட்டேரி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைத்தனர்.

Related Stories: